Monday, June 2, 2008

கடவுளும் சொப்ன சுந்தரியும்

கடவுளும் சொப்ன சுந்தரியும்

சொப்ன சுந்தரி பிரபல தமிழ் நடிகையாகத் திகழ்ந்தவள். கடந்த சில வருடங்களாக அவளுக்கு நடிக்கும் வாய்ப்புக்கள் வரவில்லை. இதனால் மனமுடைந்த சொப்ன சுந்தரி தற்கொலை முயற்ச்சியில் கூட ஈடுபட்டாள். ஆனால் அவையும் கை கூடாததால் விரக்தியில் வாழ்ந்து வந்தாள். சினிமா வாய்ப்புகள் நின்றவுடன் சொப்ன சுந்தரியும் தனது டிரைவர் தோட்டகாரன் சமையல்காரர் ஆகியோரையும் நிறுத்திவிட்டாள்.

அன்று காலை அழைப்பு மணி ஓசை கேட்டு சொப்ன சுந்தரி கதவை திறந்தாள். வெளியே அவளது பழைய வேலைக்காரி அஞ்சலை நின்று கொண்டிருந்தாள். " வா அஞ்சலை" என்று அவளை வரவேற்று உள்ளே கூட்டிச சென்றாள்.

"இந்தப் பக்கமா போயிக் கிட்டு இருந்தேன். அப்படியே உங்களையும் பார்த்து விட்டு போகலாம்னு தோணிச்சு. எப்படி இருக்கீங்க அம்மா?" என்றாள் அஞ்சலை.

"வேலை வெட்டி இல்லாமல் சும்மாதான் இருக்கிறேன் அஞ்சலை. உனக்குத் தான் தெரியுமே ஒரு காலத்தில் நான் இந்த கோடம்பாக்கத்தில் கொடி கட்டி பறந்தவள் என்று" எனறாள் சொப்ன சுந்தரி.

அஞ்சலை சிரித்துக் கொண்டே மனதுக்குள் " கொடியெல்லாம் கட்டினீங்க ஆனா சேலையை மட்டும் கட்டலை" என்று எண்ணினாள்.

அஞ்சலையிடம் " அஞ்சலை எனக்கு சினிமா சான்ஸ் திரும்ப கிடைக்க ஏதாவது வழி இருக்குதா?" என்று கேட்டாள் சொப்ன சுந்தரி.

அதற்கு அஞ்சலை அவளிடம் " அம்மா உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?" என்று பதிலுக்கு கேட்டாள். சொப்ன சுந்தரி " எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் இந்த பூஜை புனஸ்காரம் இவைகளில் எனக்கு ஈடுபாடு இல்லை. வேணுமென்றால் நான் திருப்பதிக்குப் போய் மொட்டை போட்டுக்கிறேன்" என்றாள் சொப்ன சுந்தரி.

அஞ்சலை அதற்கு " அய்யோ அப்படி பண்ணிடாதீங்க. உங்க சிகை அலங்காரம் தான் உங்களுக்கு அழகு. நான் வேறு வழி வைத்திருக்கிறேன். பக்கத்து அங்காளம்மன் கோயிலில் நீங்க மண் சோறு உண்டு அங்க பிரதடசிணம் செய்தீங்கன்னா போதும்" என்றாள்.

" என்னது மண் சோறு சாப்பிடணுமா? அங்க பிரதட்சிணம் செய்யணுமா?" என்று அலறினாள் சொப்ன சுந்தரி.

"ஏம்மா நீங்க வெளிநாட்டில ஒரு தடவை படப்பிடிப்புக்கு போன போது சாப்பிட வெறும் காய்ஞ்ச ரொட்டியும் வேகவைக்காத மாமிசமும் தான் சாப்பிட்டீங்க. சிம்லாவில நடுக்கும் குளிரில அரைகுறை துணியில ஹீரோவோட டூயட் பாடினீங்க. மண் சோறு சாப்பிட்டு அங்க பிரதட்சிணம் பண்ண ஏன் தயங்கறீங்க?" எனறாள் அஞ்சலை.

" சரி எனக்கு திரும்ப சினிமா சான்ஸ் கிடைக்க நான் இதையெல்லாம் செய்யறேன்" என்று ஒப்புக் கொண்டாள் சொப்ன சுந்தரி.

அஞ்சலை உதவி செய்ய சொப்ன சுந்தரி பக்கத்து அங்காளம்மன் கோயிலுக்குச சென்று மண் சோறு தின்று அங்க பிரதட்சிணமும் செய்தாள். கோயிலில் ஒரு வரும் அவளை அடையாளம் கண்டு கொள்ள வில்லை. வீடு வந்தவுடன் அவள் அஞசலையிடம் " எனக்கு உடம்பெல்லாம் வலிக்கிறது. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன் " என்று படுக்கை அறைக்கு கிளம்பவும் வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. அஞசலை கதவை திறந்தாள். அங்கு ஒரு படத் தயாரிப்பாளர் இயக்குனர் ஆகியோர் நின்றிருந்தனர். உடனே சொப்ன சுந்தரி பரபரப்பாகி " வாங்க வாங்க" என்று பல்லெல்லாம் வாயாக அவர்களை வரவேற்றாள்.

சோபாவில் அவர்கள் அமர்ந்தவுடன் தயாரிப்பாளர் " நாங்க ஒரு புதுப் படத்துக்கு பூஜை போட போறோம். அதில் நீங்க நடிக்கணும்" என்றார். சொப்ன சுந்தரிக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. சுதாரித்துக் கொண்டு அவள் " படத்தோட கதை என்ன?" என்று கேட்டாள். தயாரிப்பாளர் சொன்னார் " கதையை இன்னும் நாங்க முடிவு பண்ணலை ஆனால் கதைக்கு மச்சாவதாரம் னு தலைப்பு வைச்சிருக்கோம்" என்றார்.

கமலஹாஸனின் தசாவதாரம் படத்தைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருந்தாள் சொப்ன சுந்தரி. அந்த படத்தைப் போலவே இந்தப் படமும் பல வெளிநாடுகளில் படமாக்கப் படலாம் என்று கற்பனை செய்யத் துவங்கினாள். அவள் பேசாமல் இருப்பதைப் பார்த்து தயாரிப்பாளர் " உங்களுக்கு விருப்பம் இல்லைனா நாங்க வேறு நடிகையை ஏற்பாடு செய்கிறோம்" என்றார். அவர்கள் சொப்ன சுந்தரியைத் தேடி வந்ததே அவள் சமீப காலங்களில் படங்களில் நடிக்காததால் ஒரு சிறிய தொகையில் அவளை ஒப்பந்தம் செய்யலாமே என்று தான். தயாரிப்பாளர் கூறியதைக் கேட்டுப் பதறிப் போன சொப்ன சுந்தரி " எனக்கு உங்க படத்தில நடிக்க பூரண சம்மதம். படத்தில ஹீரோ யாரு?" என்றாள்.

பட இயக்குனர் கூறினார் " ஹீரோவா? அவர் ஒரு big fish ". ஹீரோ ஒரு big fish என்று கேட்டவுடன் சொப்ன சுந்தரின் மணக் கண்முன் சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த் உலக நாயகன் கமல ஹாசன் இளைய தளபதி விஜய் ஆகியோர் வலம் வந்தனர்.

ஆனாலும் சொப்ன சுந்தரிக்கு சிறு சந்தேகம் பொறி தட்டியது. இந்த big fish களெல்லாம் அழகும் இளமையும் கூடிய அசின் நயனதாரா ஷ்ரேயா ஆகியோருடன் நடித்து விட்டு வயதும் கூடி சதையும் போட்டுவிட்ட தன்னுடன் நடிப்பார்களா என்று நினைத்தாள்.

பட இயக்குனரிடம் அவள் " நீங்க ஹீரோ யாருன்னு சொன்னா நல்லா இருக்கும்" என்றாள். இயக்குனர் சிரித்துக் கொண்டே " அதான் ஹீரோ ஒரு big fish னு சொன்னேனே தமிழ்ல சொல்றதுன்னா பெரிய மீன். மச்சாவதாரம் படத்தோட ஹீரோ ஒரு மீனாகத் தானே இருக்க முடியும்" என்றார். இதைக் கேட்டு சொப்ன சுந்தரியின் முகம் சுருங்கி விட்டது. இயக்குனர் மீண்டும் சிரித்துக் கொண்டே " சாரி கொஞ்சம் தமாஷ் பண்ணினேன். ஹீரோ யாருன்னு இன்னும் முடிவு பண்ணலை" என்றார். தயாரிப்பாளர் " இந்த ஒப்பந்தம் கால் ஷீட் பற்றி கூடிய சீக்கிரம் தெரிவிக்கிறோம். இந்தாங்க முன் பணத்திற்கான செக்" என்று செக்கை சொப்ன சுந்தரியிடம் கொடுத்தார். சொப்ன சுந்தரி சில லட்ச ரூபாய்களுக்கான அந்த செக்கை கை நடுங்க வாங்கிக் கொண்டாள்.

அவர்கள் சென்ற பின் அவள் வெளியே செல்ல தயாரானாள். " எங்கே கிளம்பிட்டீங்க அம்மா" என்று அஞசலை கேட்க சொப்ன சுந்தரி சொன்னாள் " நேரே பாங்கிற்கு சென்று இந்த செக்கை அக்கவுண்டில போடடுட்டு அதிலேயிருந்து சொஞ்சம் பணத்தை எடுத்து அங்காளம்மன் கோயில் உண்டியலில் போடப் போறேன்".

No comments: