Wednesday, June 25, 2008

கடவுளும் கற்பகமும்

கடவுளும் கற்பகமும்

கற்பகம் எனது பால்ய சிநேகிதி. இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் குடியிருந்தோம் ஒரே பள்ளியில் படித்தோம் ஒரே கல்லூரிக்குச் சென்றோம். கற்பகத்துக்கு கடவுள் பக்தி அதிகம். தினம் தோட்டத்திலிருந்து பூக்கள் பறித்து வந்து மாலையாகத தொடுத்து கடவுள் படங்களுக்கு சாத்துவாள். கோயில்களுக்கு தவறாமல் செல்வாள். பக்திப் பாடல்களை விரும்பி கேட்பாள். சினிமாவுக்குப போனால் கூட பக்திப் படங்களுக்குத்தான் போவாள். நான் அப்படி இல்லை. என் அம்மா எப்பொதும் என்னை கோவித்து கொள்வாள் " என்ன இது எப்ப பார்த்தாலும் நாவலும் கையுமா? நாவலை விட்டா ரேடியோவில சினிமா பாட்டு கேக்கறது. இதெல்லாம் கொஞ்சமும் நல்லாயில்லை. பக்கத்து வீட்டு கற்பகத்தை பாரு என்ன பக்தி என்ன பக்தி".

கற்பகம் படிப்பு முடிந்த கையோடு அவளுக்கு திருமணம் நிச்சயமாயிற்று. மாப்பிள்ளை அதே ஊரில் வேலை பார்த்ததால் அவர்களது ஹனிமூன் முடிந்து திரும்பியதும் அவளைப் பார்க்கச் சென்றேன். அவளது வீட்டுக்குள் நுழைந்தவுடன் வரவேற்பரை முழுவதும் சுவாமி படங்களாக இருந்தது. கற்பகம் என்னை வரவேற்று உபசரித்தாள். நான் " என்ன ஹனிமூனை எஞ்சாய் பண்ணீங்களா எங்கெல்லாம் போனேள்?" என்று கேட்டதற்கு அவள் சொன்னாள் " நாங்க பழனி குருவாயூர் மதுரை ராமேஸ்வரம் திருச்செந்தூர் இங்கெல்லாம் போனோம்". அதைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது. "நீங்க போனது ஹனிமூனா இல்லை ஷேத்ராடனமா?" என்றேன் நான். அவள் சிரித்துக் கொண்டே " ஷேத்ராடனம் எல்லாம் இல்லை. அவருக்கும் கடவுள் பக்தி உண்டு. வாழ்க்கையை ஆரம்பிக்கறதுக்கு முன்னால கோயில்களுக்கு போனா நல்லா இருக்கும்னு சொன்னார்". வெகு நேரம் அவளுடன் அளவளாவி விட்டு நான் வீடு திரும்பினேன்.


கற்பகத்துக்கு திருமணம் ஆகி சில மாதங்கள் கழித்து எனக்கும் திருமணம் நிச்சயமாயிற்று. என் கணவர் அமெரிக்காவில் டாக்டராக வேலை பார்த்ததால் நானும் அமெரிக்கா செல்ல நேர்ந்தது. கிளம்புமுன் கறபகத்திடம் பிரியா விடை பெற்றேன். அமெரிக்கா வந்து ஒரு சில வருடங்களில் அடுத்தடுத்தார் போல இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தேன். இரண்டு பிரசவத்துக்கும் என்னோட பெற்றோர்கள் வந்து ஆறு மாதங்கள் இருந்தனர். கற்பகத்தைப் பற்றி அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். கற்பகத்தின் பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவராக காலமானதும் கற்பகத்துக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததும் அவர்கள் சொல்லித் தெரிஞ்சது.


சில வருடங்களுக்கு பின் இந்தியா செல்லும் வாய்ப்பு வந்தது. பசங்களுக்கு கோடை விடுமுறை வந்ததும் தாத்தா பாட்டியை பார்க்கணுமனு சொன்னவுடன் என்னோட ஹப்பி இந்தியாவுக்கு டிக்கெட் வாங்கி கொடுத்தார். அவருக்கு ஆபீஸ்ல லீவு கிடைக்காததால் நான் மட்டும் குழந்தைகளுடன் இந்தியா வந்தேன். வந்தவுடன் மறு நாளே கற்பகத்தைப் பார்க்க சென்றேன். கற்பகத்தின் வீட்டிற்குள் நுழைந்த எனக்கு ஒரே அதிர்ச்சி.

கற்பகத்தின் வீட்டு வரவேற்பரையிலிருந்த சுவாமி படங்களைக் காணோம். கற்பகம் மெலிஞ்சு சோகமா காட்சி அளித்தாள். என்னை வா எனறு ஈன சுரத்தில் அழைத்தாள்.

" என்ன ஆச்சு கற்பகம். இங்கே இருந்த சுவாமி படங்கள் எல்லாம் எங்கே?"னு நான் கேட்டேன் அதற்கு அவள் " சாமியாவது பூதமாவது. எல்லாம் பொய்." எனறாள். "ஏய் என்ன ஆச்சு உனக்கு இப்படி பேச?" னு நான் கேட்டேன். அவள் உள்ளே சென்று கையோடு அவள் பெண்ணைக் கூட்டி வந்தாள். ஒரு பாவாடை சட்டை போட்ட பெண் மலங்க மலங்க என்னைப் பார்த்தது. நான் " உன் பொண்ணா ஏய் குட்டி என் பேரு என்ன" என்றேன் அந்தப் பெண்ணிடம்.

" அவளால சரியா பேச முடியாது. ஊமை இல்லை. ஆனால் மூளை வளர்ச்சி இல்லை. அதனாலே பேச்சு சரியா வரல்லை. இவளைக் காண்பிக்காத டாக்டர் இல்லை. எல்லோரும் கை விட்டு விட்டார்கள். இவளைப் படச்ச கடவுள் தான் இவளை குணப் படுத்த முடியும்னு சொல்லிட்டா. கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டு நாங்கள் போகாத கோயில் இல்லை பண்ணாத பூஜைகள் கிடையாது. இதற்கு நடுவில் ஒரு சில டாக்டர்கள் இவள் பெரியவளாகும்போது கண் பார்வை குறைஞ்சு காதும் மங்கிப் போகலாம்னு சொல்றா.

கற்பகத்தின் வீட்டு வரவேற்பரையிலிருந்த சுவாமி படங்களைக் காணோம். கற்பகம் மெலிஞ்சு சோகமா காட்சி அளித்தாள். என்னை வா எனறு ஈன சுரத்தில் அழைத்தாள்.

" என்ன ஆச்சு கற்பகம். இங்கே இருந்த சுவாமி படங்கள் எல்லாம் எங்கே?"னு நான் கேட்டேன் அதற்கு அவள் " சாமியாவது பூதமாவது. எல்லாம் பொய்." எனறாள். "ஏய் என்ன ஆச்சு உனக்கு இப்படி பேச?" னு நான் கேட்டேன். அவள் உள்ளே சென்று கையோடு அவள் பெண்ணைக் கூட்டி வந்தாள். ஒரு பாவாடை சட்டை போட்ட பெண் மலங்க மலங்க என்னைப் பார்த்தது. நான் " உன் பொண்ணா ஏய் குட்டி உன் பேரு என்ன" என்றேன் அந்தப் பெண்ணிடம்.

" அவளால சரியா பேச முடியாது. ஊமை இல்லை. ஆனால் மூளை வளர்ச்சி இல்லை. அதனாலே பேச்சு சரியா வரல்லை. இவளைக் காண்பிக்காத டாக்டர் இல்லை. எல்லோரும் கை விட்டு விட்டார்கள். இவளைப் படச்ச கடவுள் தான் இவளை குணப் படுத்த முடியும்னு சொல்லிட்டா. கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டு நாங்கள் போகாத கோயில் இல்லை பண்ணாத பூஜைகள் கிடையாது. இதற்கு நடுவில் ஒரு சில டாக்டர்கள் இவள் பெரியவளாகும்போது கண் பார்வை குறைஞ்சு காதும் மங்கிப் போகலாம்னு சொல்றா.

இவளோட வருங்காலத்தை நினைச்சு எங்களுக்குப் பின்னால இவளை யார் பார்த்துப்பானு நான் குமைஞ்சு போறேன்". இவ்வாறு சொல்லி கற்பகம் என் தோளில் சாய்ஞ்சு அழுதாள். எனக்கும் அழுகையா அழுகையா வந்தது. அழுகையை நிறுத்தி கற்பகம் தொடர்ந்தாள். " இதனாலதான் எனக்கு கடவுள் நம்பிக்கை போயிடுச்சு. நான் சொன்னா தப்பா எடுத்துக்காதே. உனக்கு கடவுள் நம்பிக்கை அவ்வளவா கிடையாது. ஆனால் உனக்கு அமெரிக்காவில சொகுசு வாழ்க்கை மணி மணியா இரண்டு குழந்தைகள். ஆனால் கடவுளையே நினைச்சுண்டு உண்ணும் உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் பூஜிச்சுண்டிருந்த எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை".

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சமாளித்துக் கொண்டு நான் " கற்பகம் உன் நிலைமையைப் பார்த்து எனக்கு சங்கடமாயிருக்கு. கடவுள் நம்பிக்கை நமக்கு கஷ்டம் வரும் போது தைரியத்தையும் சக்தியையும் தர ஒரு பற்றுகோல்னு நான் நம்பறேன். கடவுள் பக்தி அதிகம் இருக்கிறவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அவர் நிச்சயம் தருவார். ஆனால் அதுக்கு முன்னால அவாளை சோதனை பண்ணுவார். இது உனக்கு சோதனைக் காலம். இப்பத் தான் உனக்கு கடவுள் பக்தி அதிகமா தேவைப்படுது. இதெல்லாம் சரி இன்னியிலே இருந்து ஈஸ்வரி என்னொட பொண்ணு. அமெரிக்காவுக்கு நான் இவளை எங்களோடு கூட்டிண்டு போறேன். அங்கே நானும் என் பசங்களும் இவளை நல்லா பார்த்துக்குவோம். என்னோட கணவர் மருத்துவத் துறையில் ஆராய்ச்சி பண்றதனால இவளை குண்படுத்த நிச்சயம் ஒரு வழி கண்டு பிடிப்பார். இவளுக்கு குணமானதும் ஒரு நல்ல அழகான அறிவான பொண்ணா உன் முன்னால கொண்டு வந்து நிறுத்துவேன். நீ சந்தோஷமா உன் வாழ்க்கையை திரும்ப ஆரம்பி. பாவம் உன்னோட ஹப்பி. அவர் உங்க ரெண்டு பேரையும் பார்த்து எவ்வளவு மனம் சங்கடப்படறாரோ. அவருக்கு ஆறுதல் சொல்லு." எனறேன்.

கற்பகம் என் கைகளைப் பற்றிக்கொண்டு " கடவுள்னு ஒருத்தர் இருக்கார்னு இப்ப நான் நிச்சயமா நம்பறேன். அவர்தான் உன் உருவத்தில வந்து ஈஸ்வரிக்கு ஒரு வழி காட்டி இருக்கார். உன்னை மாதிரி ஒரு தோழி கிடைச்சதுக்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்லணும். கொஞசம் இரு" என்று சொல்லி உள்ளே சென்று சுவாமி படங்களைக் கொண்டு வந்து மாட்டினாள். விளக்கேற்றி நமஸ்காரம் செய்தாள். ஈஸ்வரியையும் நமஸ்காரம் பண்ண வைத்து அவளைக் கட்டிக் கொண்டு அழுதாள். கனத்த மனத்துடன் நான் அவளிடமிருந்து விடை பெற்று ஈஸ்வரியைக் கூட்டிக் கொண்டு கிளம்பினேன்.

Wednesday, June 11, 2008

கடவுளும் காளியப்பனும்

கடவுளும் காளியப்பனும்

காளியப்பன் புதிய அமைச்சரவையில் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்று சில மாதங்கள் ஆகிவிட்டன. அமைச்சராவதற்கு முன் அவர் சென்னை அண்ணா சாலையில் ஒரு ஆடியோ காஸெட்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். காஸட் விற்பனை பெருக சொந்தமாக கே-சீரீஸ் என்று தானே காஸட்களை வெளியிட்டு பணக்காரர் ஆனார். பணம் சேர்ந்தவுடன் அரசியலிலும் ஈடுபாடு பெருகியது. சட்டசபை தேர்தலில் நின்று ஜெயித்து முதலமைச்சரின் நம்பிக்கையைப் பெற்று இன்று அமைச்சராகி நல்ல செல்வாக்கு பெற்றுள்ளார்.

அன்று தனது அலுவலகத்தில் கோப்பைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது அவரது உதவியாளர் வேகமாக ஓடி வந்து " அய்யா நம்ம பையனுக்கு ஆக்ஸிடென்ட் ஆகி தலையில் பலமாக அடிபட்டு பக்கத்து ஆஸ்பத்திரில் உசிருக்கு போராடிக் கிட்டு இருக்காராம்" என்று கையும் காலும் பதற கூறினார்.

காளியப்பன் உதவியாளருடன் பதறி அடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.

ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியில் வெகு நேரமாக காத்திருந்தனர். வெகு நேரத்திற்கு பிறகு வயதான ஒரு டாக்டர் வெளியே வந்து " பையனுடய சொந்தக்காரங்களா நீங்க?" என்று காளியப்பனிடம் கேட்ட பின் சொன்னார் " பையனுக்கு தலையில ரொம்ப மோசமா அடிபட்டிருக்கு. எங்கலாளானது அத்தனையும் செஞ்சுட்டோம். இனிமே பையன் பொழைக்கணும்னா அது கடவுள் கையில தான் இருக்கு".

காளியப்பன் " நீங்க அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. எவ்வளவு செலவானாலும் என் பையனை எப்படியாவது காப்பாத்தணும்" என்று அவர் கையைப் பிடித்து கேட்டார்.

டாகடர் காளியப்பனிடம் " உங்க ஆதங்கம் எனக்கு புரியது. ஆனா நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இனிமே எல்லாம் கடவுள் கையில தான் இருக்கு" எனறார்.

காளியப்பன் கோபமுற்றவராய் " கடவுள் தான் காப்பாத்தணும்னா நீங்க எல்லாம் ஏன் மருத்துவம் படிச்சுட்டு தொழில் பண்றீங்க? உங்க மருத்துவக் கல்விக்கு வேண்டி அரசாங்கம் எவ்வளவு செலவு செய்யுது தெரியுமா? கல்வி அமைச்சரான எனக்குத் தான தெரியும். நீங்க எல்லாம் இங்கே படிச்சுட்டு அமெரிக்கா ஆஸ்திரேலியானு சம்பாதிக்க போயிடறீங்க. இங்கே யார் உயிர்களை காப்பாத்தறது?".

டாக்டர் காளியப்பனின் உதவியாளரைத தனியே அழைத்து " அமைச்சர் கோபமாக இருக்கிறார். பிள்ளைப் பாசத்தில் இப்படியெல்லாம் பேசுகிறார். அருகாமையில் ஒரு கோயில் இருக்கு. அங்கு சென்று ஒரு அர்ச்சனை செய்து கடவுளைப் பிராரத்திக்கச் சொல்லுங்கள்" என்று சொல்லி அங்கிருந்து சென்றார்.

உதவியாளர் சொன்னதைக் கேட்டு காளியப்பன் வெகுண்டார். " என்னது நான் கோயிலுக்குப் போறதா? . கட்சிக் காரங்க யாராவது என்னை கோயில்ல பார்தாங்கனா என்னோட அமைச்சர் பதவி போறது மட்டுமில்லை கட்சியிலிருந்தும் என்னைத் தூக்கிடுவாங்க". அவர் சார்ந்திருந்தது ஒரு நாத்திகவாத கட்சி.

உதவியாளர் பணிவோடு சொன்னார் " ஆபத்துக்கு தோஷமில்லை. எங்கிட்ட துண்டு இருக்கு. அதிலே ஒரு முண்டாசு கட்டிக்கிட்டீங்கனா ஒருத்தருக்கும் தெரியாம சமாளிச்சுடலாம். காரிலே போக வேண்டாம் பின் பக்க வாசல் வழியா போகலாம் காளியப்பன் வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டார்.

கோயிலில் அதிக கூட்டம் இல்லை. உதவியாளர் அர்ச்சனைத் தட்டு சீட்டு ஆகியவற்றை வாங்கிக் கொண்டு காளியப்பனுடன் சுவாமி சன்னதிக்குச் செனறார். அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்ட அர்ச்சகர் வைத்தி " பேர் நட்சத்திரம் ராசி கோத்ரம் எல்லாம் சொல்லுங்கோ" எனறார். காளியப்பன் அவற்றை சொல்லும்போது வைத்தி அவரை உற்று பார்த்தார். பிறகு "செத்த நாழியாகும். இங்கேயே நில்லுங்கோ" என்று சொல்லி விட்டு வேகமாக உள்ளே சென்றார்.

கர்பக்ரஹத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த பெரிய அர்ச்சகரிடம் போய் " அண்ணா வெளில யாரு வந்திருக்கா தெரியுமா? நம்ம அம்பிக்கு மெடிகல் காலேஜ் அட்மிஷனுக்கு பத்து லட்சம் பணம் கேட்டு அட்மிஷன் தர மறுத்தானே அந்த கிராதகன் வந்திருக்கான். அம்பி மனசு உடைஞ்சு தற்கொலை பண்ணினதுக்கு காரணமான கொலைகாரன் அமைச்சர் காளியப்பன் வந்திருக்கான். அவனோட பிள்ளை ஆக்ஸிடென்டுல அடிபட்டு உசிருக்கு போராடிக்கிட்டு இருக்கானாம். அவன் பொழைக்கிறதுக்கு சுவாமிக்கு ஒரு அர்ச்சனை பண்ணனுமாம். எனக்கு வந்த கோபத்தில போடா கோடி ரூபாய் பணம் கொடுத்தாலும் உனக்கு வேண்டி அர்ச்சனை பண்ண மாட்டோம். நீ பண்ண பாவத்துக்கு உன் பிள்ளை அனுபவிக்கட்டும்னு சொல்லத் தோணிச்சு".


பெரியவர் எழுந்தார். கை கால் பதற " வைத்தி சுவாமி சன்னிதானத்தில இப்படியெல்லாம் பேசக்கூடாது. காளியப்பன் நமக்கு தீங்கு செஞசிருக்கலாம். ஆனால் ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டு இருக்கிற சமயத்தில நம்மாலானதை செய்யலேனா சுவாமி நம்மை மன்னிக்க மாட்டார். பகைவருக்கும் அருள் செய்வாய் இறைவா என்கிறதுதான் தமிழ் பண்பாடு. போ அர்ச்சனையை முழு மனசா பண்ணு. நான் இங்கே உட்காரந்து அந்த பிள்ளைக்கு சரியாறவரைக்கும் பாராயணங்கள் பண்ணப் போறேன்".

வைத்தி வெட்கி தலை குனிந்தவராய் சென்று அர்ச்சனை பண்ணினார். அர்ச்சனை முடிந்து பிராசத தட்டுடன் வந்து காளியப்பனிடம் அதைக் கொடுத்து சொன்னார் " கவலைப் படாம போங்கோ. பிள்ளை பொழைச்சுக்குவான். உள்ளே பெரியவர் அவனுக்காக பிரார்த்தனை செஞசுட்டிருக்கார்".

காளியப்பன் தலை குனிந்தவராய் அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்டு " சாமி உள்ளே நீங்க பேசிக்கிட்டது என் காதில் விழுந்தது. அந்த பெரியவர் பாதங்களை என் கண்ணீரால் கழுவ வேண்டும்" என்று நாத் தழுக்க கூறி விட்டு உதவியாளருடன் ஆஸ்பத்திருக்கு விரைந்தார்.

வெகு நேரம் காத்திருந்த பின் அய்.சி.யூ விலிருந்து வெளி வந்த டாக்டர் காளியப்பன் கைகளைப் பற்றி " உங்க பையன் பிழைத்து விட்டான். மருத்துவ உலகத்தில் இது ஒரு அதிசயம். இது நிச்சயம் அந்த கடவுள் செயல் தான்" எனறார். டாக்டர் கைகளைப் பற்றிய காளியப்பன் கூறினார் " உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. எனக்கு நீங்கள் தான் கடவுள்".

அங்கிருந்து நேராக அரசின் தலமை செயலகம் சென்ற காளியப்பன் முதலமைச்சரிடம் தனது அமைச்சர் பதவியைத் துறக்கும் கடிதத்தைக் கொடுத்தார். ஆச்சரியமுற்ற முதலமைச்சரிடம் நடந்தவைகளை விளக்கிக் கூறிய காளியப்பன் கூறினார் " எனக்கு திடீரென்று கடவுள் பக்தி வரவில்லை. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் கடவுள் இல்லை எனறு கூறிய நாம் மனித நேயத்தை மறந்து சில பாவங்களை செய்கிறோம். உதாரணமாக கல்வித் துறையில் லஞ்சம் வாங்கி அட்மிஷன் தருகிறோம். கடவுள் என்று ஒருவர் நம்மை தண்டிக்க இல்லை என்ற மமதையால். கடவுள் பக்தியை விட மனித நேயம் மேலானது என்று ஒரு பெரியவர் மூலம் உணர்ந்தேன். இனி என் வாழ் நாட்களை மனித சேவையில் கழிக்க விரும்புகிறேன்".

Sunday, June 8, 2008

கடவுளும் கிச்சாமியும்

கடவுளும் கிச்சாமியும்

கிருஷ்ணமூர்த்தி என்ற கிச்சாமி அவனது பெற்றோர்களுக்கு ஒரே பையன். பல வருடங்கள் குழந்தையில்லாமல் தவமிருந்து பெற்ற பிள்ளையாதலால் அவனை மிகவும் செல்லமாக வளர்த்தனர் அவனது பெற்றோர்கள். அவனை பள்ளிக் கூடத்தில் சேர்ப்பதற்கு விமரிசையாக பூஜை நடத்தி திறந்த காரில் புது சொக்காய் கழுத்தில் மாலை சகிதம் அழைத்துச் சென்றனர். ஆனால் அவனுக்கோ படிப்பு சுத்தமாகத் தலையில் ஏறவில்லை. ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியடம் சொல்லி அவனைத் தூக்கி தூக்கிப் போட்டு பத்தாம் வகுப்பு வரை அவன் முன்னேறினான். பத்தாம் வகுப்பில் பத்து தடவை கோட் அடித்து தனக்கும் கல்விக்கும் வெகு தூரம் என்று முற்றுப் புள்ளி வைத்தான்.

கடவுள் பக்தி மிகுந்த அவனது பெற்றோர்கள் " நாராயணா நீ தான் அவனை எப்படியாவது கரை சேர்க்கணும்" எனறு வேண்டிக் கொண்டு ஒருவர் பின் ஒருவராய் இறைவனடி சேர்ந்தனர்.

கிச்சாமியின் அம்மா காலமானவுடன் துக்கம் விசாரிக்க வந்த மாமா அவனிடம் சொன்னார் "கிச்சாமி உனக்கோ படிப்பு இல்லை. அதனாலே வேலை எதுவும் கிடைக்க வாய்ப்பு இல்லை. உங்க அம்மாவோட பெட்டியிலே ஒரு கிருஷ்ணர் விக்ரஹம் இருக்கு. அதுக்கு தினசரி பூஜை பண்ணு. கிருஷ்ணர் உனக்கு ஏதாவது வழி விடுவார்".

மாமா சென்ற பின் கிச்சாமி தனித்து விடப் பட்டான். அம்மா காலமாகி ஒரு வருடத்திற்கு கோயிலுக்குச் செல்வதோ பூஜைகள் பண்ணுவதோ கூடாது என்று காத்திருந்தான். கிராமத்திலிருந்த நிலத்தின் விளைச்சலாக வந்த நெல்லைக் கொண்டும் வங்கியில் அப்பா விட்டுப் போயிருந்த பணத்தைக் கொண்டும் காலட்சேபம் பண்ணினான். சரியாக ஒரு வருடம் கழிந்தபின் ஒரு நாள் அம்மாவின் பெட்டியிலிருந்து கிருஷ்ணர் விக்ரஹத்தை எடுத்து பூஜை பண்ண ஆரம்பித்தான். தினசரி பூஜைக்குப் பின் தான் சாப்பிடுவான். முதலில் ஒரு பயனும் அவனுக்குத் தெரியவில்லை.

ஓரு நாள் கிச்சாமி கோயிலுக்குச சென்று திரும்பி வரும் வழியில் அவனது பள்ளித் தோழனின் தந்தை எதிரில் வந்தார். அவர் கிச்சாமியிடம் " ராமு பெரிய கம்ப்யூட்டர் படிப்பெல்லாம் முடிச்சிருக்கான். ஆனா ஒரு வேலை தான் கிடைக்க மாட்டேங்கிறது" என்று அஙகலாய்த்துக் கொண்டார். கிச்சாமி உடனே மனதுக்குள் விக்ரஹ கிருஷ்ணரை தியானம் செய்து " ராமுவை சென்னைக்குச் சென்று ஒரு கம்பெனியில் விசாரித்தால் வேலை கிடைக்கும்" என்றான். சில நாடகள் கழித்து ராமுவின் அப்பா கிச்சாமியிடம் வந்து ராமுவுக்கு வேலை கிடைத்து விட்டது என்று கூறி நன்றி சொல்லி விட்டுப போனார். அதே மாதிரி இன்னும் சிலருக்கு கிச்சாமி உதவ அவனது பெயர் ஊரில் பரவத் தொடங்கியது. எல்லோரும் கிச்சாமிக்கு ஜோசியம் தெரியும் என்றும் அவன் சொல்வதெல்லாம் பலிக்கிறது என்றும் பேசிக்கொள்ளவே பலர் அவனைத் தேடி வீட்டிற்கு வந்து ஜோசியம் கேட்டார்கள். கிச்சாமி விக்ரஹ கிருஷ்ணரை மனதில் தியானித்து அவர்களுக்கு பதில் கூற அவை பலித்தன.

கிச்சாமிக்கு ஜோசியத் தொழிலில் நல்ல வருமானம் வர அவனது மாமா தனது பெண்ணை அவனுக்கு கல்யாணமும் பண்ணிக் கொடுத்தார். கிச்சாமியிடம் சிலர் வாஸ்து ஜோசியமும் கேட்டனர். அவர்களை அவன் சாமர்த்தியமாக சமாளித்தான். ஒருத்தர் கேட்டார் " எங்க வீட்டில காத்தோட்டமே சரியில்லை. வாஸ்து சாஸ்திரத்தில இதுக்கு என்ன பரிகாரம்?". கிச்சாமி யோசித்துக் கூறினான் " தெற்கை பார்த்து இரண்டு பெரிய ஜன்னல்களை வைங்க. காத்து பிச்சுக் கிட்டு போகும்".

இப்படியாக அவனது ஜோசியத் தொழில் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் பக்கத்து கிராமத்திலிருந்து ஒரு தொழிலாளி அவனிடம் வந்தான். கையில் வைத்திருந்த கசங்கிய காகிதத்தை கிச்சாமியிடம் கொடுத்து " சாமி இது என் பெஞ்சாதியோட சாதகம். அவ முழுகாம இருக்கா. நல்லா பாத்து சொல்லுங்க என்ன கொழந்தை பொறக்கும்னு" என்றான்.

கிச்சாமி " இது எத்தனையாவது குழந்தை?" னு கேட்டான். அதற்கு அந்த தொழிலாளி " கணக்கெல்லாம் வைச்சுக்கலீங்க" எனறான். அடப்பாவி என்று மனசுக்குள் சொல்லி கிச்சாமி கேட்டான் " ஏம்பா? இந்த நிரோத்னு கருத்தடை சாதனம் பத்தி கேள்விப்பட்டதில்லையா?". தொழிலாளி சொன்னான் " நான் எங்க ஊர் கீத்துக் கொட்டாயிலே அதோட விளம்பரத்தைப் பார்த்தேன். ஒண்ணும் விளங்கலை. விளம்பரத்தில முதலில் நிரோத் கிடைக்கிறது சுலபம்னு ஒருத்தர் பெட்டிக் கடைல வாங்கறதைக் காட்டினாங்க. அப்புறம் அதை வைச்சுக்கறது சுலபம்னு சட்டைப் பையில வைச்சுக்கறதை காட்டினாங்க. இதெல்லாம் புரிஞ்சுச்சு. ஆனால் கடைசியில அதை உபயோகிக்கறது சுலபம்னு சொன்னாங்களெ ஒழிய எப்படி சுலபம்னு காட்டலை". இதைக்கேட்டு கிச்சாமி விழுந்து விழுந்து சிரித்தான்.

கிச்சாமி ஜாதகத்தை வைத்துக் கொண்டு கை விரல்களை நீட்டி மடக்கி கணக்குப் போடுவது போல நடித்த பின் சொன்னான் " உனக்கு தங்க விக்ரஹம் போல ஆண் குழந்தை பிறக்கும்". அதற்கு அந்த தொழிலாளி " அட போங்க சாமி. நல்ல சேதியா பெண் குழந்தை பிறக்கும்னு நீங்க சொன்னா அது பலிக்கும்னு உங்க கிட்ட வந்தேன். இப்படி ஏமாத்திப்பிட்டீங்களே" என்றான். கிச்சாமிக்கு ஒரே ஆச்சரியம். "எல்லோரும் பெண் குழந்தை வேணாம்னு அது பிறந்தவுடனே கள்ளிப் பாலை கொடுத்து கொலறாங்க. நீ பெண் குழந்தை வேணும்னு சொல்றயே எப்படி" என்று கேட்டான். அதற்கு அந்த தொழிலாளி " முதல்ல பிறந்த ஆம்பளைப் பசங்க இந்த தீப்பெட்டி தொழிற்சாலை பீடி தொழிற்சாலைக்கு வேலைக்கு போயிடறாங்க. வீட்டல சம்சாரம் தனியாக் கிடந்து அல்லாடுது. ஒரு பொம்பளைக் குழந்தை இருந்தா அதுக்கு கூட மாட ஒத்தாசையா இருக்கும் இந்த தண்ணிக் கொடம் தூக்கறதுக்கு சாணி அள்ளி எருவாட்டி தடடறது அப்புறம் அடுப்புக்கு வேணும்கிற சுள்ளி பொறுக்கறதுக்கு" என்றான். கிச்சாமி கேட்டான் "ஏம்பா இப்படி சின்னப் பசங்களை வேலைக்கு அனுப்பற? அவங்களை பள்ளிக் கூடத்துக்கு அனுப்பினா அங்கே சத்துணவெல்லாம் தறாங்க. பசங்களை படிக்க வை. அதுவும் குறிப்பா பெண் குழந்தைகளை படிக்க வை. அவங்க தான் நாளைக்கு உனக்கு கஞ்சி ஊத்துவாங்க. சரி போ உன் இஷ்டப்படியே உனக்கு பெண் குழந்தை பிறக்கும்" னு சொல்லி அவனை அனுப்பி வைத்தான்.

அவன் சென்ற பின் வெகு நேரம் கிருஷணர் விக்ரஹத்துக்கு முன் நிஷ்டையில் அமர்ந்திருந்தான். அவன் மனம் சஞ்சலமுற்றிருந்தது. பிறகு திடீரென்று கிளம்பி பக்கத்து அம்பாள் கபே முதலாளி முன் போய் நின்றான். அவர் " வா கிச்சாமி ஏதாவது சாப்பிடறயா?" என்று கேட்டார். கிச்சாமி அவரிடம் " எனக்கு ஏதாவது வேலை போட்டுத் தறேளா?" என்றான். ஆச்சரியமுற்றவராய் அவர் " என்னது உனக்கு வேலையா? ஏன்?" என்று கேட்டார்.

கிச்சாமி கண்களில் நீர் தளும்ப " படிக்க வேண்டிய வயதில் படிக்க வசதி இல்லாமலும் குடும்பத்திற்கு உதவவும் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் சிறுவர் சிறுமியரை பார்த்து நான் வெட்கி தலை குனிகிறேன். படிக்க எல்லா வசதிகளிருந்தும் படிப்பை உதறித் தள்ளினதற்கு வேதனைப் படுகிறேன். தெய்வத்தை வைத்து தொழில் பண்ணாமல் செய்யும் தொழிலே தெய்வம் என்று உணருகிறேன்" என்றான். இதைக் கேட்டு மனம் உருகிய முதலாளி " கிச்சாமி உன்னப் பார்த்து பெருமையா இருக்கு. உனக்கு சரக்கு போடத் தெரியும்னா இன்னியிலிருந்து சரக்கு மாஸ்டருக்கு அசிஸ்டெண்ட் ஆக வேலையில் சேரு. ஆமாம் ஜாதகத் தொழிலை விட்டுடப் போறயா?" என்றார். கிச்சாமி அதற்கு " இல்லை இங்கே வேலை செஞ்ச நேரம் போக மீதி நேரத்தில அதைத் தொடர்வேன். அதிலிருந்து வரும் பணத்தை கல்வி அறக் கட்டளைக்கு கொடுத்து ஏழை மாணவர்களுக்கு உதவுவேன்" என்றான். வீட்டிலிருந்த கிருஷ்ணர் விக்ரஹத்தின் முகதிதில் புன்னகை தவழ்ந்தது.

Monday, June 2, 2008

கடவுளும் சொப்ன சுந்தரியும்

கடவுளும் சொப்ன சுந்தரியும்

சொப்ன சுந்தரி பிரபல தமிழ் நடிகையாகத் திகழ்ந்தவள். கடந்த சில வருடங்களாக அவளுக்கு நடிக்கும் வாய்ப்புக்கள் வரவில்லை. இதனால் மனமுடைந்த சொப்ன சுந்தரி தற்கொலை முயற்ச்சியில் கூட ஈடுபட்டாள். ஆனால் அவையும் கை கூடாததால் விரக்தியில் வாழ்ந்து வந்தாள். சினிமா வாய்ப்புகள் நின்றவுடன் சொப்ன சுந்தரியும் தனது டிரைவர் தோட்டகாரன் சமையல்காரர் ஆகியோரையும் நிறுத்திவிட்டாள்.

அன்று காலை அழைப்பு மணி ஓசை கேட்டு சொப்ன சுந்தரி கதவை திறந்தாள். வெளியே அவளது பழைய வேலைக்காரி அஞ்சலை நின்று கொண்டிருந்தாள். " வா அஞ்சலை" என்று அவளை வரவேற்று உள்ளே கூட்டிச சென்றாள்.

"இந்தப் பக்கமா போயிக் கிட்டு இருந்தேன். அப்படியே உங்களையும் பார்த்து விட்டு போகலாம்னு தோணிச்சு. எப்படி இருக்கீங்க அம்மா?" என்றாள் அஞ்சலை.

"வேலை வெட்டி இல்லாமல் சும்மாதான் இருக்கிறேன் அஞ்சலை. உனக்குத் தான் தெரியுமே ஒரு காலத்தில் நான் இந்த கோடம்பாக்கத்தில் கொடி கட்டி பறந்தவள் என்று" எனறாள் சொப்ன சுந்தரி.

அஞ்சலை சிரித்துக் கொண்டே மனதுக்குள் " கொடியெல்லாம் கட்டினீங்க ஆனா சேலையை மட்டும் கட்டலை" என்று எண்ணினாள்.

அஞ்சலையிடம் " அஞ்சலை எனக்கு சினிமா சான்ஸ் திரும்ப கிடைக்க ஏதாவது வழி இருக்குதா?" என்று கேட்டாள் சொப்ன சுந்தரி.

அதற்கு அஞ்சலை அவளிடம் " அம்மா உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?" என்று பதிலுக்கு கேட்டாள். சொப்ன சுந்தரி " எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் இந்த பூஜை புனஸ்காரம் இவைகளில் எனக்கு ஈடுபாடு இல்லை. வேணுமென்றால் நான் திருப்பதிக்குப் போய் மொட்டை போட்டுக்கிறேன்" என்றாள் சொப்ன சுந்தரி.

அஞ்சலை அதற்கு " அய்யோ அப்படி பண்ணிடாதீங்க. உங்க சிகை அலங்காரம் தான் உங்களுக்கு அழகு. நான் வேறு வழி வைத்திருக்கிறேன். பக்கத்து அங்காளம்மன் கோயிலில் நீங்க மண் சோறு உண்டு அங்க பிரதடசிணம் செய்தீங்கன்னா போதும்" என்றாள்.

" என்னது மண் சோறு சாப்பிடணுமா? அங்க பிரதட்சிணம் செய்யணுமா?" என்று அலறினாள் சொப்ன சுந்தரி.

"ஏம்மா நீங்க வெளிநாட்டில ஒரு தடவை படப்பிடிப்புக்கு போன போது சாப்பிட வெறும் காய்ஞ்ச ரொட்டியும் வேகவைக்காத மாமிசமும் தான் சாப்பிட்டீங்க. சிம்லாவில நடுக்கும் குளிரில அரைகுறை துணியில ஹீரோவோட டூயட் பாடினீங்க. மண் சோறு சாப்பிட்டு அங்க பிரதட்சிணம் பண்ண ஏன் தயங்கறீங்க?" எனறாள் அஞ்சலை.

" சரி எனக்கு திரும்ப சினிமா சான்ஸ் கிடைக்க நான் இதையெல்லாம் செய்யறேன்" என்று ஒப்புக் கொண்டாள் சொப்ன சுந்தரி.

அஞ்சலை உதவி செய்ய சொப்ன சுந்தரி பக்கத்து அங்காளம்மன் கோயிலுக்குச சென்று மண் சோறு தின்று அங்க பிரதட்சிணமும் செய்தாள். கோயிலில் ஒரு வரும் அவளை அடையாளம் கண்டு கொள்ள வில்லை. வீடு வந்தவுடன் அவள் அஞசலையிடம் " எனக்கு உடம்பெல்லாம் வலிக்கிறது. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன் " என்று படுக்கை அறைக்கு கிளம்பவும் வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. அஞசலை கதவை திறந்தாள். அங்கு ஒரு படத் தயாரிப்பாளர் இயக்குனர் ஆகியோர் நின்றிருந்தனர். உடனே சொப்ன சுந்தரி பரபரப்பாகி " வாங்க வாங்க" என்று பல்லெல்லாம் வாயாக அவர்களை வரவேற்றாள்.

சோபாவில் அவர்கள் அமர்ந்தவுடன் தயாரிப்பாளர் " நாங்க ஒரு புதுப் படத்துக்கு பூஜை போட போறோம். அதில் நீங்க நடிக்கணும்" என்றார். சொப்ன சுந்தரிக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. சுதாரித்துக் கொண்டு அவள் " படத்தோட கதை என்ன?" என்று கேட்டாள். தயாரிப்பாளர் சொன்னார் " கதையை இன்னும் நாங்க முடிவு பண்ணலை ஆனால் கதைக்கு மச்சாவதாரம் னு தலைப்பு வைச்சிருக்கோம்" என்றார்.

கமலஹாஸனின் தசாவதாரம் படத்தைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருந்தாள் சொப்ன சுந்தரி. அந்த படத்தைப் போலவே இந்தப் படமும் பல வெளிநாடுகளில் படமாக்கப் படலாம் என்று கற்பனை செய்யத் துவங்கினாள். அவள் பேசாமல் இருப்பதைப் பார்த்து தயாரிப்பாளர் " உங்களுக்கு விருப்பம் இல்லைனா நாங்க வேறு நடிகையை ஏற்பாடு செய்கிறோம்" என்றார். அவர்கள் சொப்ன சுந்தரியைத் தேடி வந்ததே அவள் சமீப காலங்களில் படங்களில் நடிக்காததால் ஒரு சிறிய தொகையில் அவளை ஒப்பந்தம் செய்யலாமே என்று தான். தயாரிப்பாளர் கூறியதைக் கேட்டுப் பதறிப் போன சொப்ன சுந்தரி " எனக்கு உங்க படத்தில நடிக்க பூரண சம்மதம். படத்தில ஹீரோ யாரு?" என்றாள்.

பட இயக்குனர் கூறினார் " ஹீரோவா? அவர் ஒரு big fish ". ஹீரோ ஒரு big fish என்று கேட்டவுடன் சொப்ன சுந்தரின் மணக் கண்முன் சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த் உலக நாயகன் கமல ஹாசன் இளைய தளபதி விஜய் ஆகியோர் வலம் வந்தனர்.

ஆனாலும் சொப்ன சுந்தரிக்கு சிறு சந்தேகம் பொறி தட்டியது. இந்த big fish களெல்லாம் அழகும் இளமையும் கூடிய அசின் நயனதாரா ஷ்ரேயா ஆகியோருடன் நடித்து விட்டு வயதும் கூடி சதையும் போட்டுவிட்ட தன்னுடன் நடிப்பார்களா என்று நினைத்தாள்.

பட இயக்குனரிடம் அவள் " நீங்க ஹீரோ யாருன்னு சொன்னா நல்லா இருக்கும்" என்றாள். இயக்குனர் சிரித்துக் கொண்டே " அதான் ஹீரோ ஒரு big fish னு சொன்னேனே தமிழ்ல சொல்றதுன்னா பெரிய மீன். மச்சாவதாரம் படத்தோட ஹீரோ ஒரு மீனாகத் தானே இருக்க முடியும்" என்றார். இதைக் கேட்டு சொப்ன சுந்தரியின் முகம் சுருங்கி விட்டது. இயக்குனர் மீண்டும் சிரித்துக் கொண்டே " சாரி கொஞ்சம் தமாஷ் பண்ணினேன். ஹீரோ யாருன்னு இன்னும் முடிவு பண்ணலை" என்றார். தயாரிப்பாளர் " இந்த ஒப்பந்தம் கால் ஷீட் பற்றி கூடிய சீக்கிரம் தெரிவிக்கிறோம். இந்தாங்க முன் பணத்திற்கான செக்" என்று செக்கை சொப்ன சுந்தரியிடம் கொடுத்தார். சொப்ன சுந்தரி சில லட்ச ரூபாய்களுக்கான அந்த செக்கை கை நடுங்க வாங்கிக் கொண்டாள்.

அவர்கள் சென்ற பின் அவள் வெளியே செல்ல தயாரானாள். " எங்கே கிளம்பிட்டீங்க அம்மா" என்று அஞசலை கேட்க சொப்ன சுந்தரி சொன்னாள் " நேரே பாங்கிற்கு சென்று இந்த செக்கை அக்கவுண்டில போடடுட்டு அதிலேயிருந்து சொஞ்சம் பணத்தை எடுத்து அங்காளம்மன் கோயில் உண்டியலில் போடப் போறேன்".